உலகக்கோப்பையில் வங்கதேசம் புறக்கணிப்பு: விளையாட்டு ஆலோசகரின் பேச்சால் வீரர்கள் கொந்தளிப்பு!

உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணி பங்கேற்காதது அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விளையாட்டு ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி வருவது குழப்பத்தை இன்னும் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் விளையாட மறுத்ததால், உலக அரங்கில் வங்கதேச கிரிக்கெட் அணி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து வீரர்கள் தரப்பில் கடும் அதிருப்தி கிளம்பியுள்ளது. “இந்த முடிவில் எங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை, இக்கட்டான நேரத்தில் யாரும் எங்களுக்கு ஆதரவாக நிற்கவில்லை” என வீரர்கள் குமுறுகின்றனர்.
ஒருபுறம் இது அரசின் முடிவு எனக்கூறி வாரியம் தப்பிக்க முயல்கிறது, மறுபுறம் இது வீரர்களின் ‘தியாகம்’ என சித்திரிக்கப்படுகிறது. நிர்வாகத்தின் சரியான ஒருங்கிணைப்பு இல்லாத காரணத்தால், வீரர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதுடன், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் வங்கதேசம் ஓரங்கட்டப்படும் அபாயமும் உருவாகியுள்ளது.
இந்த வரலாற்றுத் தவறுக்கு யாரைப் பொறுப்பாக்குவது என்று தெரியாமல் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.