ஈரானுக்கு ஆயுதம் வழங்கும் நாடுகளுக்கு 50 சதவீத வரி விதிப்பு டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சர்வதேச வர்த்தக ரீதியாக ஒரு மிகப்பெரிய அதிரடி முடிவை எடுத்துள்ளார். ஈரானுக்கு ராணுவ ஆயுதங்களை வழங்கும் நாடுகள் மீது 50 சதவீத வரி விதிக்கப்படும் என்ற டிரம்பின் அறிவிப்பு உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் ராணுவ பலத்தை முடக்கும் நோக்கில் டிரம்ப் தனது பழைய ஆயுதமான வரி விதிப்பு கொள்கையை மீண்டும் கையில் எடுத்துள்ளார். இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் ஈரானுக்கு ராணுவ ஆயுதங்களை வழங்கும் எந்த நாடாக இருந்தாலும் அந்த நாடு அமெரிக்காவிற்கு விற்கும் அனைத்து பொருட்களுக்கும் உடனடியாக 50 சதவீத வரி விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதில் எவ்வித விலக்கும் அல்லது சலுகையும் அளிக்கப்படாது என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஈரானுக்கு ராணுவ தொழில்நுட்பம் மற்றும் ஆயுதங்களை வழங்கும் முக்கிய நாடுகளாக ரஷ்யா, சீனா மற்றும் வட கொரியா ஆகியவை கருதப்படுகின்றன.
ரஷ்யா ஈரானுக்கு நவீன போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் வான்வழி பாதுகாப்பு அமைப்புகளை வழங்கி வருகிறது.
சீனா நேரடியாக ஆயுதங்களை வழங்குவதை விட ட்ரோன் உற்பத்தி மற்றும் ஏவுகணை எரிபொருள் போன்ற ராணுவ பயன்பாட்டிற்கு தேவையான தொழில்நுட்ப ஆதரவை வழங்கி வருகிறது.
வட கொரியா ஏவுகணை தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த உபகரணங்களை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
டிரம்பின் இந்த அறிவிப்பு சர்வதேச வர்த்தகத்தில் புதிய சவால்களை உருவாக்கியுள்ளது. குறிப்பாக ரஷ்யா மற்றும் சீனா போன்ற பொருளாதார வல்லரசு நாடுகள் மீது இத்தகைய கடுமையான வரி விதிப்பை அமல்படுத்துவது அமெரிக்காவிற்கு எளிதான காரியமல்ல. இதனால் இந்த வரி விதிப்பு நடைமுறை சிறிய நாடுகளை குறிவைத்து இருக்குமோ என்ற கருத்தும் நிலவுகிறது. அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு 50 சதவீத வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால் அது சம்பந்தப்பட்ட நாடுகளின் பொருளாதாரத்தை பெருமளவில் பாதிக்கும்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே தற்காலிகமாக தாக்குதல்கள் நிறுத்தப்பட்டிருந்தாலும் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகள் போரை முழுமையாக முடிவுக்கு கொண்டு வருமா என்பது இன்னும் உறுதியாகவில்லை. இந்த நிலையில் டிரம்பின் இந்த பொருளாதார நெருக்கடி ஈரானை மேலும் தனிமைப்படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
ஒரு பார்வையில்
ஈரானுக்கு ஆயுதம் தரும் நாடுகளுக்கு 50 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும்.
இந்த வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு.
எந்த நாடும் வரி விதிப்பிலிருந்து விலக்கு பெற முடியாது என்று எச்சரிக்கை.
சீனா, ரஷ்யா மற்றும் வட கொரியா போன்ற நாடுகளின் வர்த்தகத்தை இது பாதிக்கக்கூடும்.
சர்வதேச சந்தையில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தில் பெரும் மாற்றம் ஏற்பட வாய்ப்பு.