இந்தோ-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் திடீர் மாற்றம்: வெள்ளை மாளிகையின் ரகசிய நகர்வால் பரபரப்பு!

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி 9-ம் தேதி வெள்ளை மாளிகை வெளியிட்ட ஒப்பந்தத்தின் அதிகாரப்பூர்வ ‘தகவல் அறிக்கையில்’ (Factsheet), சில முக்கிய நிபந்தனைகளை அமெரிக்கா இரவோடு இரவாக மாற்றியுள்ளது. குறிப்பாக பருப்பு வகைகள் மற்றும் விவசாயப் பொருட்கள் தொடர்பான பிரிவுகளில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது நிபுணர்களிடையே பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
மாற்றப்பட்ட வார்த்தைகள்: ‘உறுதி’ என்பதற்குப் பதிலாக ‘விருப்பம்’
ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட ஆவணத்தில், அமெரிக்காவிடமிருந்து 500 பில்லியன் டாலர் (சுமார் ₹45 லட்சம் கோடி) மதிப்பிலான பொருட்களை வாங்க இந்தியா ‘உறுதி’ (Committed) அளித்துள்ளதாகக் கூறப்பட்டிருந்தது. ஆனால், திருத்தப்பட்ட புதிய அறிக்கையில் அது ‘விருப்பம்’ (Intention) என்று மாற்றப்பட்டுள்ளது. மேலும், அந்த பிரம்மாண்ட கொள்முதல் பட்டியலில் இருந்து ‘விவசாயம்’ (Agriculture) என்ற வார்த்தையும் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் வரி மற்றும் ரஷ்ய எண்ணெய் விவகாரம்
இந்தியா தனது ‘டிஜிட்டல் சேவை வரி’யை ரத்து செய்யும் என்று வெள்ளை மாளிகை முதலில் குறிப்பிட்டிருந்தது. ஆனால், தற்போதைய திருத்தப்பட்ட அறிக்கையில் அந்த வரியும் நீக்கப்பட்டுள்ளது. அதே சமயம், ரஷ்ய எண்ணெய் கொள்முதல் மற்றும் இறக்குமதி வரி தொடர்பான நிபந்தனைகளில் எந்த மாற்றமும் இல்லை.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தினால், இந்திய இறக்குமதி பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள 25% கூடுதல் வரியை நீக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார். மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தரப்பிலிருந்து கிடைத்துள்ள தகவலின்படி, இந்த ஒப்பந்தம் மார்ச் மாத நடுப்பகுதியில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.