இந்தியாவின் ரகசிய தரவுகள் விற்பனை: தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து – அமித் ஷா கடும் எச்சரிக்கை!

புது தில்லி: இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் நிலையில், சைபர் குற்றங்களும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன. டெல்லியில் நடைபெற்ற சைபர் மோசடி தடுப்பு குறித்த தேசிய மாநாட்டில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாட்டின் மிக முக்கியமான தரவுகள் திருடப்பட்டு எதிரி நாடுகளுக்கு விற்கப்படுவதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இது தேசப் பாதுகாப்பிற்கு பெரும் சவாலாக இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.
தற்போதைய காலகட்டத்தில் சைபர் குற்றவாளிகள் தனித்தனியாக செயல்படுவதில்லை, மாறாக அவர்கள் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவன அமைப்பைப் போலச் செயல்படுகின்றனர். நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நிர்வாகத்தை விட ஒரு படி மேலே இருக்கும் இவர்களை எதிர்கொள்ள சிபிஐ (CBI), என்ஐஏ (NIA), ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் மாநில காவல்துறை என அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.
சைபர் குற்றங்களுக்கு எதிராக அரசு எடுத்துள்ள அதிரடி நடவடிக்கைகள் குறித்தும் அவர் புள்ளிவிவரங்களைப் பகிர்ந்து கொண்டார்:
- 12 லட்சத்திற்கும் அதிகமான சந்தேகத்திற்குரிய சிம் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- 3 லட்சம் மொபைல் போன்களின் IMEI எண்கள் முடக்கப்பட்டுள்ளன.
- 20,853 சைபர் குற்றவாளிகள் கடந்த டிசம்பர் 2025 வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
- பல்வேறு அமைப்புகளின் முயற்சியால் சுமார் ₹8,000 கோடி ரூபாய் சைபர் கொள்ளையர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.
சைபர் குற்றங்களை உடனுக்குடன் புகாரளித்தல், I4C தளம், தடய அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் பொதுமக்களிடையே ‘சைபர் ஹைஜீன்’ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்றவற்றின் முக்கியத்துவத்தை அமித் ஷா சுட்டிக்காட்டினார். மேலும், வங்கி அமைப்புகளில் ‘மியூல் ஹண்டர்’ (Mule Hunter) போன்ற நவீன மென்பொருள்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும், டிஜிட்டல் ஆதாரங்களைப் பாதுகாப்பதில் உள்ள குறைபாடுகளை நீக்கினால் மட்டுமே குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத்தர முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் அனைத்து கூட்டுறவு வங்கிகளும் சைபர் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படும் என்றும், நாட்டு மக்களின் விழிப்புணர்வு இன்றி இந்த போரில் வெற்றி பெறுவது சாத்தியமில்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.