இந்தியா வரும் கப்பல் மீது தாக்குதல் ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம்

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியாவின் காண்ட்லா துறைமுகம் நோக்கி வந்து கொண்டிருந்த ‘மயூரி நாரி’ என்ற சரக்குக் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தி அருகே கொடூரமான தாக்குதலுக்கு உள்ளானது. இந்தத் தாக்குதலில் கப்பலில் தீப்பிடித்ததை அடுத்து, ஓமன் கடற்படையினர் 20 மாலுமிகளை மீட்டனர். எனினும், மாயமான மேலும் மூன்று மாலுமிகளைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே அதிகரித்து வரும் போர்ப் பதற்றமே இந்தத் தாக்குதலுக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. சர்வதேச எரிசக்தி பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வரும் நிலையில், இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மூன்று வணிகக் கப்பல்கள் தாக்கப்பட்டதாக பிரிட்டன் கடல்சார் வர்த்தக மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.