இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடினால் நாட்டை விட்டு வெளியேறுங்கள், வாட்ஸ்அப்பிற்கு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

செய்தி பிரிவு : உங்கள் வாட்ஸ்அப் மெசேஜ்கள் பாதுகாப்பாக இருக்கிறதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இந்திய குடிமக்களின் தனிப்பட்ட ரகசியங்களை பாதுகாப்பதில் எந்த சமரசமும் செய்ய முடியாது என்று மெட்டா நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய அரசியலமைப்பை மதிக்க முடியாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். இந்த அதிரடி தீர்ப்பு, சாதாரண மக்கள் தங்கள் டிஜிட்டல் தகவல்கள் திருடப்படுவதிலிருந்து பாதுகாப்பை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ்அப்பின் புதிய பாதுகாப்பு விதிகள் மூலம் பயனர்களின் தகவல்களை மற்ற மெட்டா நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள முயற்சிப்பதாக புகார் எழுந்தது. இதற்காக இந்திய போட்டி ஆணையம் ஏற்கனவே வாட்ஸ்அப்பிற்கு ரூ. 213 கோடி அபராதம் விதித்துள்ளது. கிராமப்புறங்களில் வசிக்கும் சாதாரண மக்களால் இவ்வளவு சிக்கலான விதிகளை புரிந்து கொள்ள முடியுமா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மக்களின் தனியுரிமை உரிமையை காக்க உச்ச நீதிமன்றம் எடுத்துள்ள இந்த முடிவு, தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்துள்ளது.