அமெரிக்காவின் ‘டாய்லெட் பேப்பர்’ பாகிஸ்தான்? ராணுவ அமைச்சரின் அதிரடி ஒப்புதலால் உலகமே அதிர்ச்சி!

அமெரிக்காவின் கையைப் பிடித்துக் கொண்டு இத்தனை ஆண்டுகளாகப் பயணித்த பாகிஸ்தான் இன்று அடைந்தது என்ன? “வாஷிங்டன் எங்களை வெறும் ‘டாய்லெட் பேப்பர்’ போலப் பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறிந்துவிட்டது” என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்திலேயே அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். இவரது இந்த அதிரடி வாக்குமூலம் தற்போது உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டுச் சக்திகளை அளவுக்கதிகமாக நம்பியதால்தான் பாகிஸ்தான் இன்று இவ்வளவு பெரிய படுகுழியில் வீழ்ந்துள்ளதா என்ற கேள்வியை இது அந்நாட்டு மக்களிடையே எழுப்பியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஜிஹாத் என்ற பெயரில் அமெரிக்கா நடத்திய போர் ஒரு திட்டமிடப்பட்ட அரசியல் சூழ்ச்சி என்றும், அதற்குப் பாகிஸ்தான் மக்கள் இன்று பெரும் விலை கொடுத்து வருவதாகவும் கவாஜா ஆசிஃப் குற்றம் சாட்டினார். குறிப்பாக, 9/11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவிற்காகத் தலிபான்களுக்கு எதிரான போரில் இறங்கியது இஸ்லாமாபாத் செய்த வரலாற்றுப் பிழை என்று அவர் வருத்தம் தெரிவித்தார். இதனால் பாகிஸ்தானின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள ஈடுசெய்ய முடியாத இழப்புகளை மீண்டும் சீரமைக்க முடியுமா என்பது இப்போது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.