துபாய் டூ திருச்சி விமான சேவை, பயணிகளுக்கு அடித்தது ஜாக்பாட்!

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த துபாய் – திருச்சி இடையிலான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை, இன்று (ஏப்ரல் 18) முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. துபாயில் இருந்து ஐஎக்ஸ்-6622 என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அமீரக நேரப்படி மாலை 3.55 மணிக்கு புறப்பட்டு, இந்திய நேரப்படி இரவு 8 மணியளவில் திருச்சி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைகிறது.
திருச்சியில் இருந்து பிற்பகல் 12.10 மணிக்கு புறப்படும் விமானம், பிற்பகல் 2.55 மணிக்கு துபாயைச் சென்றடையும் வகையில் சேவை அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை விமான சேவை குறித்த தகவல்கள் ஏதும் வெளியிடப்படாத நிலையில், வரும் திங்கட்கிழமை (ஏப்ரல் 20) முதல் தொடர்ச்சியாக விமான சேவைகளை இயக்க ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான முன்பதிவு வசதிகள் இணையதளத்தில் செய்யப்பட்டுள்ளன. விமான கட்டணம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், மீண்டும் நேரடி விமான சேவை தொடங்கியுள்ளதற்கு பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.