தண்ணீர் பாட்டில் வீசி விரட்டினார்கள்.. இபிஎஸ் மீது ஓபிஎஸ் சரமாரி குற்றச்சாட்டு

தேனி மாவட்டம் போடியில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் இருந்து தான் விலகியது மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து அதிரடியான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அதிமுகவில் இருந்து தான் சுயமாக வெளியேறவில்லை என்றும், தன்னை அங்கிருந்தவர்கள் திட்டமிட்டு வெளியேற்றியதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக, கட்சி பொதுக்குழுவின் போது தன் மீது தண்ணீர் பாட்டில்களை வீசி, தன்னை வலுக்கட்டாயமாக விரட்டியடித்ததாக அவர் வேதனையுடன் குறிப்பிட்டார்.
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த ஓபிஎஸ், இபிஎஸ் தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதாகக் கூறினார். சசிகலாவால் முதல்வர் பதவிக்கு அடையாளம் காட்டப்பட்ட அவர், இன்று நன்றி உணர்வு இல்லாமல் அவரைப் பற்றித் தவறாகப் பேசி வருகிறார். அடிப்படை நன்றி உணர்வே இல்லாத ஒரு மனிதராக இபிஎஸ் உருவெடுத்துள்ளதாக அவர் தனது பேட்டியில் சாடினார்.
தனது அரசியல் பயணம் குறித்துப் பேசிய அவர், கடந்த 50 ஆண்டுகளாக அரசியலில் இருப்பதாகவும், நகர்மன்றத் தலைவர் முதல் முதலமைச்சர் வரை பல்வேறு பொறுப்புகளைத் திறம்பட வகித்துள்ளதாகவும் தெரிவித்தார். போடி தொகுதியில் தான் மூன்று முறை வெற்றி பெற்று மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளதாகவும், அதனால் இந்த தேர்தலிலும் மக்கள் தன்னை அமோகமாக வெற்றி பெறச் செய்வார்கள் என்றும் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்தார்.