அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன் திமுகவில் இருந்து பிடி செல்வக்குமார் அதிரடி விலகல்

திமுக மாநில வர்த்தக அணி துணை செயலாளரும், நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளருமான பிடி செல்வக்குமார், அக்கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார். கன்னியாகுமரி தொகுதியில் தனக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், மிகுந்த மனவேதனையுடன் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மக்களுக்காக கடந்த 12 ஆண்டுகளாக களப்பணியாற்றி வருவதாகவும், ஆனால் திமுகவில் வாரிசு அரசியல் மற்றும் பணபலம் கொண்டவர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் செல்வக்குமார் குற்றம் சாட்டினார். நேர்மையாக உழைப்பவர்களுக்கு கட்சியில் அங்கீகாரம் கிடைப்பதில்லை என்றும், அரசியல் சதுரங்க விளையாட்டில் தான் தோற்கடிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். மாற்றம் வரும் என்ற நம்பிக்கையில் திமுகவில் இணைந்த தனக்கு ஏமாற்றமே மிஞ்சியதாக அவர் குறிப்பிட்டார்.
விஜய்யின் வளர்ச்சிக்கு 27 ஆண்டுகள் உழைத்த தான், தற்போது கன்னியாகுமரி மண்ணின் மைந்தனாக மக்களின் ஆதரவை பெற்றுள்ள கட்சிகளுக்கே தனது ஆதரவை வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். தேசிய கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தன்னிடம் ஆதரவு கோரி வருவதாகவும், ரவுடியிசம் மற்றும் கட்டப்பஞ்சாயத்து இல்லாத தரப்பினருக்கு விரைவில் ஆதரவு அளிக்க உள்ளதாகவும் பிடி செல்வக்குமார் கூறினார்.