இஸ்ரேலிய ராணுவத்தில் ஆள் பற்றாக்குறையால் கடும் பின்னடைவு ஏற்படும் என ராணுவ தளபதி எச்சரிக்கை

இஸ்ரேல் தற்போது ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் ஈரான் என பல முனைகளில் போரிட்டு வரும் நிலையில், அதன் ராணுவத்தில் சுமார் 12,000 வீரர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய ராணுவ தளபதி அயல் ஜமீர், போதிய வீரர்கள் இல்லாததால் ராணுவம் உள்ளுக்குள்ளேயே சிதைந்துவிடும் என்று ‘ரெட் ஃபிளாக்’ எச்சரிக்கை விடுத்துள்ளார். கட்டாய ராணுவச் சேர்க்கை மற்றும் சேவைக் காலத்தை நீட்டிப்பதற்கான சட்டங்களைக் கொண்டு வராவிட்டால் சாதாரணப் பணிகளைக் கூட செய்ய முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீண்டகாலப் போர் காரணமாக வீரர்கள் சோர்வடைந்துள்ள நிலையில், ஆள் பற்றாக்குறை ராணுவத்தின் செயல்பாட்டுத் திறனைப் பாதிப்பதாக ஜமீர் கவலை தெரிவித்துள்ளார். குறிப்பாக, தீவிர மரபுவழி சமூகத்தினர் ராணுவ சேவையில் சேராதது தொடர்பான அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்கள் இந்த நெருக்கடியை அதிகப்படுத்தியுள்ளன. உடனடி சட்ட மாற்றங்கள் செய்யப்படாவிட்டால், இஸ்ரேலின் பாதுகாப்பு வளையம் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என்று அவர் பிரதமர் நெதன்யாகு தலைமையிலான அமைச்சரவையை எச்சரித்துள்ளார்.