சென்னை மற்றும் செங்கல்பட்டு இடையே இரயில் மோதல்களைத் தவிர்க்க வருகிறது அதிநவீன கவாச் பாதுகாப்பு

தெற்கு இரயில்வேயின் பாதுகாப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்த 548 கிலோமீட்டர் தொலைவிற்கு தானியங்கி ‘கவாச்’ கருவி பொருத்தப்பட உள்ளது. சுமார் 310.18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில் அதிநவீன கவாச் 4.0 பதிப்பு பயன்படுத்தப்படும். முதற்கட்டமாக சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையிலான 60 கி.மீ வழித்தடத்திலும் மற்றும் ஜோலார்பேட்டை முதல் ஈரோடு வரையிலான 180 கி.மீ தூரத்திலும் இந்த வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
சுமார் 2,950 கோடி ரூபாய் மதிப்பிலான ஒட்டுமொத்த பாதுகாப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்த பணிகள் நடைபெறுகின்றன. மேலும் ஷொரனூர் முதல் மங்களூர் வரையிலான 308 கி.மீ தூரத்திற்கு ஆப்டிகல் ஃபைபர் கேபிள்கள் அமைக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நவீன தொழில்நுட்பம் அமலுக்கு வருவதன் மூலம் தெற்கு இரயில்வே மண்டலத்தில் இரயில் விபத்துக்கள் மற்றும் மோதல்கள் முற்றிலும் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.