ஏழு நாட்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்படும் கிண்டி சிறுவர் பூங்கா

பறவைக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் 20-ஆம் தேதி முதல் மூடப்பட்டிருந்த கிண்டி சிறுவர் இயற்கை பூங்கா, பாதுகாப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்ததை அடுத்து இன்று முதல் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 19-ஆம் தேதிக்குப் பிறகு உயிரிழப்புகள் ஏதும் பதிவாகாததாலும், நிலைமை தற்போது சீராக உள்ளதாலும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பூங்கா மூடப்பட்டிருந்த நாட்களில் அனைத்து கூண்டுகள், நீர் ஆதாரங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் முறையாகத் தூய்மைப்படுத்தப்பட்டு நச்சுநீக்கம் செய்யப்பட்டுள்ளன. நோய் பரவலைத் தடுக்க நுழைவாயில்களில் கிருமிநாசினி வசதிகள் உள்ளிட்ட கூடுதல் உயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோடை விடுமுறை நெருங்கும் வேளையில், சிறுவர்களைக் கவரும் இந்த பூங்கா மீண்டும் திறக்கப்படுவது சுற்றுலாப் பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.