ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அதிரடித் திட்டம்

மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில் ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 15 அம்சங்கள் கொண்ட அமைதித் திட்டத்தை அனுப்பியுள்ளார். ஒரு மாத கால போர்நிறுத்தம் மற்றும் ஈரானின் யுரேனியம் செறிவூட்டலைத் தடுப்பது போன்ற முக்கிய நிபந்தனைகள் இதில் இடம்பெற்றுள்ளன. இதற்குப் பிரதிபலனாக ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கவும் அணுசக்தி மேம்பாட்டிற்கு உதவவும் அமெரிக்கா முன்வந்துள்ளது.
இந்தத் திட்டத்தை ஒரு ‘பெரிய பரிசு’ என்று குறிப்பிட்டுள்ள ட்ரம்ப் பேச்சுவார்த்தைகளை ஜே.டி. வான்ஸ் மற்றும் மார்கோ ரூபியோ ஆகியோர் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தார். இருப்பினும் அமைதி முயற்சிகளுக்கு மத்தியில் 3,000 கூடுதல் வீரர்களை அப்பகுதிக்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதலுக்கு இது நிரந்தர தீர்வைத் தருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.