உலகமே எரிபொருள் தட்டுப்பாட்டில் தவித்தாலும் கவலையின்றி இருக்கும் ஐஸ்லாந்து

உலகெங்கும் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு நிலவினாலும், ஐஸ்லாந்து நாடு தனது பசுமை ஆற்றல் கொள்கையினால் அந்த பாதிப்பில் இருந்து தப்பித்துள்ளது. எரிமலை வெப்பம் மற்றும் பனிப்பாறை ஆறுகளைக் கொண்டு நூறு சதவீத மின்சாரத்தை அந்த நாடு உற்பத்தி செய்கிறது. இதனால் சமையல் மற்றும் வீடுகளை வெப்பப்படுத்துவதற்கு அவர்களுக்கு கச்சா எண்ணெய் தேவைப்படுவதில்லை. உலக சந்தையில் எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டாலும், இந்த நாட்டின் எரிசக்தி கட்டமைப்பு எவ்வித தங்குதடையுமின்றி இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பசுமை ஆற்றல் பயன்பாடு அதிகரித்துள்ளதால், ஐஸ்லாந்தில் உள்ள பெட்ரோல் பங்குகள் படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன. அவற்றுக்கு பதிலாக நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் வேகமாக அமைக்கப்படுகின்றன. தற்போது அங்குள்ள வாகனங்களில் நாற்பது சதவீதம் மின்சாரத்தால் இயங்குபவை. அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை முழுமையாக ஒழிக்க அந்த அரசு திட்டமிட்டுள்ளது. இயற்கையை ஆதாரமாகக் கொண்டு எரிசக்தி தேவையை பூர்த்தி செய்யும் ஐஸ்லாந்து, இன்று உலக நாடுகளுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது.