மாநிலங்களவையில் பெரும்பான்மையை தாண்டியது என்டிஏ கூட்டணி அரசியலமைப்பு சட்டத்திருத்தம் சாத்தியமா

மாநிலங்களவையில் என்டிஏ கூட்டணியின் பலம் 141-ஆக உயர்ந்துள்ளதால் மத்திய அரசு வலுவான நிலையை எட்டியுள்ளது. பாஜகவின் பலம் 106-ஆக அதிகரித்துள்ள நிலையில், அதிமுக மற்றும் ஜேடியு உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் சாதாரண மசோதாக்களை நிறைவேற்றுவதில் இனி சிக்கல் இருக்காது. மறுபுறம் காங்கிரஸ் 29 இடங்களுடன் எதிர்க்கட்ச வரிசையில் முதன்மையாக உள்ளது. மீதமுள்ள இடங்களுக்கான தேர்தல் முடிவுகள் வரும்போது இந்த சமன்பாடு மேலும் மாறக்கூடும்.
இருப்பினும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ போன்ற முக்கிய அரசியலமைப்பு சட்டத்திருத்தங்களை மேற்கொள்ள தேவையான 164 உறுப்பினர்களின் ஆதரவு இன்னும் என்டிஏ வசம் இல்லை. சாதாரண பெரும்பான்மையை விட சிறப்பு பெரும்பான்மை என்பது மிகப்பெரிய சவாலாகவே நீடிக்கிறது. எனவே மிகமுக்கியமான சட்ட மாற்றங்களை கொண்டு வர வேண்டுமானால், கூட்டணிக் கட்சிகள் மட்டுமின்றி பிற கட்சிகளின் ஆதரவையும் திரட்ட வேண்டிய கட்டாயத்தில் தற்போதைய அரசு உள்ளது.