சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை போக்க முந்த்ரா துறைமுகத்திற்கு வருகிறது பிரம்மாண்ட கப்பல்

நாட்டின் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை நீக்க பாரசீக வளைகுடாவிலிருந்து 45,000 மெட்ரிக் டன் எல்பிஜி ஏந்திய ‘சிவாலிக்’ கப்பல் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்திற்கு திங்கள்கிழமை வந்தடைகிறது. கப்பல் வந்தவுடன் நாடு முழுவதும் விநியோகத்தை விரைவுபடுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக கப்பல் அமைச்சக அதிகாரி ராஜேஷ் குமார் சின்ஹா தெரிவித்துள்ளார். ஈரான் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்த எரிவாயு இறக்குமதி சுமூகமாக நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு இந்த வருகையின் மூலம் விரைவில் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் தேவையற்ற அச்சத்தில் கூடுதல் முன்பதிவு செய்ய வேண்டாம் என்றும், ஆன்லைன் முறையைப் பயன்படுத்துமாறும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. எரிவாயு தட்டுப்பாடு நிரந்தரமானது அல்ல என்றும், விநியோகச் சங்கிலி முழுமையாகச் செயல்படுவதாகவும் அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.