இந்திய வரலாற்றில் முதல்முறை நீதிமன்றம் அனுமதித்த கருணை கொலை

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த 32 வயது இளைஞர் ஹரிஷ் ராணா, கடந்த 13 ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்த நிலையில், அவருக்கு கருணைக் கொலை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 2013-ல் கட்டிடத்திலிருந்து விழுந்து மூளைக் காயமடைந்த ஹரிஷின் நிலையை கருத்தில் கொண்டு, நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் அமர்வு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மனிதாபிமான உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஹரிஷுக்கு அளிக்கப்படும் உயிர் காக்கும் கருவிகள் படிப்படியாக அகற்றப்பட உள்ளன. தனது மகனின் தீராத துயரத்தை காண முடியாமல் தவித்த பெற்றோர், கண்ணீருடன் அவருக்கு திலகமிட்டு இறுதி விடை கொடுத்து அனுப்பி வைத்தனர். இந்தியாவில் நீதிமன்றம் நேரடியாக கருணைக் கொலைக்கு அனுமதி வழங்கிய முதல் நிகழ்வாக இது கருதப்படுகிறது.