தெலுங்கானாவில் 100 தெருநாய்கள் விஷம் வைத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி

தெலுங்கானா மாநிலம் மஞ்சேரியல் மாவட்டத்தில் உள்ள கிஷ்தாபூர் கிராமத்தில் சுமார் 100 தெருநாய்களுக்கு விஷ ஊசி செலுத்தி கொல்லப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் செயலாளரின் உத்தரவின் பேரில் இந்த கொடூர சம்பவம் நடத்தப்பட்டு நாய்கள் நதிக்கரையில் புதைக்கப்பட்டன. கடந்த டிசம்பர் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவே இந்த அநாகரீகமான செயல் அரங்கேற்றப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக ஜன்னாரம் போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் விலங்கு வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த சில மாதங்களில் தெலுங்கானாவில் சுமார் 1300 நாய்கள் கொல்லப்பட்டிருப்பது விலங்கு நல ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மனிதாபிமானமற்ற கொலைகளுக்கு பின்னால் உள்ள அதிகாரிகளின் தொடர்பு குறித்து போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.