ஜப்பான் கடலில் வடகொரியா ஏவுகணை மழை பொழிந்ததால் ஆசியாவில் கடும் பதற்றம்

மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவும் சூழலில் ஜப்பான் கடலை நோக்கி சுமார் 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வடகொரியா புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கூட்டு ராணுவப் பயிற்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பியாங்யாங்கின் சுனான் பகுதியிலிருந்து இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக கொரிய தீபகற்பத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்துள்ளதாக தென்கொரியாவின் கூட்டுப் படைத் தளபதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஏவுகணைகள் ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே விழுந்ததால் தற்போது வரை பெரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என ஜப்பான் கடலோர காவல்படை உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் தங்களின் கண்காணிப்பு அமைப்புகளை தீவிரப்படுத்தியுள்ளன. அமெரிக்காவுடனான ராணுவப் பயிற்சிக்கு வடகொரியா ஏற்கனவே கடும் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் நிலைமையை உன்னிப்பாகக் கவனிக்க இரு நாடுகளும் சிறப்புப் படைகளை நிலைநிறுத்தியுள்ளன.