மரண பயத்தில் மாலுமிகள், வளைகுடா கடலில் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு நடுவே தவிப்பு

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதலால் வளைகுடா பகுதி போர்க்களமாக மாறியுள்ளது. ஹார்முஸ் நீரிணையில் பயணிக்கும் கப்பல்கள் மீது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் நடத்தப்படும் தாக்குதல்கள் மாலுமிகளின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. சுமார் 20,000 மாலுமிகள் கடலிலும் துறைமுகங்களிலும் தஞ்சம் புகுந்துள்ளனர். உணவு மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஒருபுறமிருக்க, ஜிபிஎஸ் கருவிகள் முடக்கப்படுவதால் கப்பல்களை இயக்குவதிலும் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஏற்கனவே ஏழுக்கும் மேற்பட்ட கப்பல்கள் சேதமடைந்துள்ளன. இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மாலுமிகளால் தங்கள் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. பல மாலுமிகள் தங்கள் பாஸ்போர்ட்டுகள் நிறுவனங்களிடம் இருப்பதாலும், ஒப்பந்த விதிகள் காரணமாகவும் வெளியேற முடியாமல் சிக்கியுள்ளனர். காப்பீடு மூலம் கப்பல்களை மீட்டெடுக்க முடியும், ஆனால் மனித உயிர்களுக்கு ஈடு இணை இல்லை என மாலுமிகள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.