இந்தியாவைத் தொடர்ந்து ரஷ்ய எண்ணெய்க்கு அமெரிக்கா திடீர் சலுகை உலக சந்தையில் அதிரடி மாற்றம்

சர்வதேச எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க இந்தியா மற்றும் சில நாடுகளுக்கு ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா 30 நாட்கள் தற்காலிக விலக்கு அளித்துள்ளது. அரபு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மையைக் கட்டுப்படுத்த அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த அவசர முடிவை எடுத்துள்ளார். மார்ச் 5-ஆம் தேதிக்கு முன்பாக கப்பல்களில் ஏற்றப்பட்ட எண்ணெயை இறக்கிக் கொள்ள இந்த சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் இது குறித்துக் கூறுகையில், இந்த நடவடிக்கை உலகளாவிய விநியோகத்தை நிலைப்படுத்துவதற்காகவே தவிர ரஷ்யாவிற்கு லாபம் ஈட்டித் தருவதற்காக அல்ல என்று விளக்கினார். ஆசிய கடல் பகுதிகளில் சிக்கியுள்ள சுமார் 95 லட்சம் பேரல் எண்ணெயை ஏப்ரல் 4-ஆம் தேதிக்குள் இறக்குமதி செய்ய நாடுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தியாவின் எரிசக்தித் தேவைகளுக்குத் தற்காலிக நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.