எரிபொருள் தட்டுப்பாடு வதந்தியால் பெட்ரோல் பங்குகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற வதந்தியால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு அச்சம் நிலவுகிறது. சென்னை, தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட நகரங்களில் அதிகாலை முதலே பெட்ரோல் பங்குகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பி வருகின்றனர். சிலிண்டர் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து இந்த பதற்றம் அதிகரித்துள்ளது.
போதுமான கையிருப்பு உள்ளதாக எண்ணெய் நிறுவனங்களும் அரசும் உறுதியளித்துள்ள நிலையில் மக்கள் கேன்களில் பெட்ரோல் வாங்குவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தேவையற்ற அச்சத்தால் செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. தற்போதைய சூழலில் பொதுமக்கள் நிதானத்தைக் கடைபிடிக்குமாறும் அத்தியாவசியத் தேவைக்கு மட்டும் எரிபொருளைப் பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.