ஈரானில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் அதிரடி தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் அழிப்பு

ஈரான் மீது கடந்த 11 நாட்களாக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் நடத்திய தீவிர தாக்குதலில் அந்நாட்டின் கடற்படை பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளது. ஐஆர்ஐஎஸ் மக்ரான் மற்றும் ஷாகித் பஹ்மன் பாகேரி உள்ளிட்ட முக்கிய ட்ரோன் தாங்கிக் கப்பல்கள் உட்பட 50-க்கும் மேற்பட்ட ஈரானியக் கப்பல்கள் தகர்க்கப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை அலுவலகமான சென்காம் (CENTCOM) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் சுமார் 5000 ராணுவ இலக்குகள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பக்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளத்தின் மீதான ஈரானின் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஈரானின் நவீனத் தொழில்நுட்பக் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டதால் அந்நாட்டின் கடல்வழி பாதுகாப்பு தற்பொழுது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.