13 ஆண்டுகளாக கோமாவில் இருந்த இளைஞரின் உயிர் காக்கும் கருவிகளை அகற்ற உச்ச நீதிமன்றம் அதிரடி அனுமதி

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹரீஷ் ராணா என்ற இளைஞர் கடந்த 13 ஆண்டுகளாக கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். 2013-இல் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது, கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து விழுந்து மூளை காயம் அடைந்த அவருக்கு எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில், செயற்கை சுவாசம் மற்றும் உணவு குழாய்கள் மூலம் வாழ்ந்து வந்த அவரது உயிர் காக்கும் கருவிகளை அகற்ற பெற்றோரின் கோரிக்கையை ஏற்று உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு, நோயாளியின் நலன் மற்றும் மருத்துவ நிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்ப்பை வழங்கியது. ஹரீஷ் ராணாவின் நிலை ‘தாவரத்தைப் போன்றது’ என்று குறிப்பிட்ட நீதிமன்றம், இதுபோன்ற சூழலில் உள்ள நோயாளிகளுக்கு கருணைக் கொலை தொடர்பான சட்டங்களை உருவாக்குவது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.