தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம் 9 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் 2025-2026 கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. இத்தேர்வை 12,467 பள்ளிகளைச் சேர்ந்த 8.82 லட்சம் மாணவர்கள், தனித்தேர்வர்கள் மற்றும் சிறைவாசிகள் என மொத்தம் 9,09,002 பேர் எழுதுகின்றனர். ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இத்தேர்விற்காக மாநிலம் முழுவதும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேர்வு முறைகேடுகளைத் தடுக்க 4,800 பறக்கும் படையினரும், 45,000 ஆசிரியர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வினாத்தாள் பாதுகாப்பு கருதி ஆசிரியர்களின் செல்போன்களுக்கு இந்த ஆண்டு முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சொல்வதை எழுதுபவர் சலுகை வழங்கப்பட்டுள்ளது. தேர்வு குறித்த சந்தேகங்களுக்கு பிரத்யேக கட்டுப்பாட்டு அறை மற்றும் மின்னஞ்சல் வசதியையும் அரசு ஏற்படுத்தியுள்ளது. கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு மையங்களை நேரில் ஆய்வு செய்தார்.