கரூர் விபத்து வழக்கு விசாரணைக்காக மார்ச் 17 இல் சிபிஐ முன் ஆஜராகிறார் செந்தில் பாலாஜி

கடந்த செப்டம்பர் 27 அன்று கரூரில் நடந்த கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வரும் மார்ச் 17 ஆம் தேதி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக உள்ளார். சில ஊடகங்களில் இது குறித்து முரணான செய்திகள் வெளியான நிலையில், சிபிஐ அனுப்பிய சம்மனின் அடிப்படையில் நேரில் சென்று உரிய விளக்கம் அளிக்கப்போவதாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த வழக்கில் ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். சமீபத்தில் விஜய்க்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், தற்போது செந்தில் பாலாஜியின் இந்த நேரடி ஆஜர் விசாரணை வளையத்தில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. இதனால் மார்ச் 17 அன்று சிபிஐ மேற்கொள்ளும் விசாரணை அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.