மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கோலாகலமாக நடைபெறவுள்ள குடமுழுக்கு

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2009ஆம் ஆண்டுக்குப்பிறகு, வரும் செப்டம்பர் 17ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 2018ல் ஏற்பட்ட தீ விபத்தால் தள்ளிப்போன இந்த புனித நிகழ்விற்காக தற்போது 15.81 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. வீரவசந்தராயர் மண்டபம் பழமை மாறாமல் சீரமைக்கப்பட்டு வரும் நிலையில், பக்தர்களிடமிருந்து 5.16 கோடி ரூபாய் நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளது.
கோவில் பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் அனைத்தும் வரும் மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் சித்திரைத் திருவிழா உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் வரிசையாக வருவதால், பக்தர்களின் வசதிக்காக செப்டம்பர் மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடைபெறும் இந்த வைபவம் மதுரை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.