ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இல்லத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு

கான்பெராவிலுள்ள பிரதமர் அந்தோணி அல்பானீஸின் அதிகாரப்பூர்வ இல்லமான ‘தி லாட்ஜில்’ செவ்வாய்க்கிழமை இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அவர் உடனடியாக வெளியேற்றப்பட்டார். பலத்த பாதுகாப்புடன் சுமார் மூன்று மணி நேரம் நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு எவ்வித வெடிபொருட்களும் கண்டறியப்படவில்லை. இரவு 9 மணியளவில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்னரே பிரதமர் மீண்டும் இல்லத்திற்கு திரும்ப அனுமதிக்கப்பட்டார்.
ஆஸ்திரேலிய ஃபெடரல் காவல்துறை இந்தச் சம்பவத்தால் பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிவித்துள்ளது. சமீபகாலமாக ஆஸ்திரேலியாவில் அரசியல் தலைவர்கள் மற்றும் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய சவால்களை எதிர்கொள்ள தேசிய அளவில் புதிய பாதுகாப்பு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.