பழிவாங்க துடித்த திருடன் கடந்த 15 ஆண்டுகளாக போலீஸ் வீடுகளை மட்டுமே குறிவைத்து கைவரிசை காட்டிய வினோதம்

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தீபேஷ் என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக காவல்துறையினரின் வீடுகளில் மட்டுமே திருடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 15 ஆண்டுகளுக்கு முன்பு போலீசாரால் தாக்கப்பட்ட கோபத்தில், அவர்களைப் பழிவாங்கவே இந்த வினோத செயலில் ஈடுபட்டதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அண்மையில் கான்டோவா போலீஸ் குடியிருப்பில் நடந்த திருட்டு தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.
வியாபாரி போல் வேடமிட்டு போலீஸ் குடியிருப்புகளை நோட்டமிட்டு வந்த இவர், சிக்கியபோது தப்ப முயன்று காயமடைந்தார். தற்போது நீதிமன்றக் காவலில் உள்ள அவரிடமிருந்து ரொக்கம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் போலீஸ் வீடுகளை மட்டுமே குறிவைத்துத் திருடி வந்த இந்த ‘சீரியல் திருடன்’ இறுதியாக சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளார்.