நுரையீரலில் சிக்கிய இலந்தை பழ கொட்டையை அகற்றி சிறுமியின் உயிரை மீட்ட கொல்கத்தா மருத்துவர்கள்

மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவரின் நுரையீரலில் சிக்கியிருந்த இலந்தை பழ கொட்டையை கொல்கத்தா என்ஆர்எஸ் மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர். கடந்த ஐந்து நாட்களாக கடுமையான சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த அந்த சிறுமி, உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆக்ஸிஜன் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் 3 செமீ நீளமுள்ள அந்த கொட்டை சுவாசப் பாதையை முழுமையாக அடைத்திருந்தது கண்டறியப்பட்டது.
மருத்துவர் ஜெய்தீப் தேவ் தலைமையிலான நிபுணர் குழுவினர் நவீன பிராங்கோஸ்கோபி மற்றும் டோர்மியா பாஸ்கெட் கருவியைப் பயன்படுத்தி இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். சுவாசப் பாதையில் கரிமப் பொருட்கள் சிக்கினால் அவை வீங்கி உயிருக்கு ஆபத்தான பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். தற்போது அந்த சிறுமி நலமுடன் உள்ள நிலையில், உணவு உண்ணும் போது அனைவரும் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.