பீர் நிறுவனத்தின் அதிரடி முடிவு: 6,000 ஊழியர்கள் பணிநீக்கம்..!

பீர் நிறுவனத்தின் அதிரடி முடிவு: 6,000 ஊழியர்கள் பணிநீக்கம்..!

உலகின் முன்னணி பீர் உற்பத்தி நிறுவனமான ஹைனெக்கென் (Heineken), தனது ஊழியர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. மதுபானங்களின் விலை உயர்வு மற்றும் நுகர்வோர் தேவை குறைந்து வரும் தற்போதைய சூழலில், நிறுவனம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.

6,000 வேலைவாய்ப்புகள் பறிபோகின்றன

உலக அளவில் பீர் உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் உள்ள ஹைனெக்கென், அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இது நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 7 சதவீதமாகும். தற்போது இந்த நிறுவனத்தில் சுமார் 87,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். உற்பத்திச் செலவு அதிகரிப்பு மற்றும் லாபக் கணிப்பு குறைந்ததே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

திடீர் தலைமை மாற்றம்

கடந்த மாதம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) டால்ப் வான் டென் பிரிங்க் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். வரும் மே மாதம் அவர் பொறுப்பிலிருந்து விலக உள்ள நிலையில், அவருக்குப் பின் அந்த இடத்தைப் பிடிக்கப்போவது யார் என்ற நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. இந்தத் தலைமை மாற்றமும் நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை வேகப்படுத்தியுள்ளது.

செலவைக் குறைக்க தீவிர முயற்சி

நிறுவனத்தின் நிதித்துறைத் தலைவர் ஹரோல்ட் வான் டென் ப்ரூக் இதுகுறித்துக் கூறுகையில்:

“நிறுவனத்தின் செயல்பாடுகளை வலுப்படுத்தவும், எதிர்கால வளர்ச்சியில் முதலீடு செய்யவும் இந்த கடினமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. முக்கியமற்ற சந்தைகளில் கவனம் செலுத்துவதைக் குறைத்து, செயல்திறனை மேம்படுத்துவதே எங்கள் இலக்கு.”

வருவாய் இலக்கு குறைப்பு

ஹைனெக்கென் நிறுவனம் தனது எதிர்கால லாபக் கணிப்பையும் குறைத்துள்ளது. 2026-ஆம் ஆண்டில் செயல்பாட்டு லாப வளர்ச்சி 2 முதல் 6 சதவீதம் வரை மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முன்னதாக கணிக்கப்பட்ட 4 முதல் 8 சதவீதத்தை விட மிகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

விற்பனை வீழ்ச்சி மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக, விநியோக நெட்வொர்க் மற்றும் பிராந்திய அலுவலகங்களிலும் மேலும் பல மாற்றங்கள் இருக்கும் என நிறுவனம் எச்சரித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *