வாஸ்து தோஷமா? வீட்டை இடிக்க வேண்டாம்.. இந்த சின்ன மாற்றங்களே போதும்!

வாஸ்து சாஸ்திர விதிகளின்படி அமையாத வீடுகளில் வசிப்பவர்கள், தங்கள் வாழ்க்கையில் தடைகளையும் நிதி நெருக்கடிகளையும் சந்திப்பதுண்டு. இதற்காக வீட்டின் அமைப்பையே மாற்றி அமைப்பதோ அல்லது பெருமளவில் பணத்தை செலவழிப்பதோ அவசியமில்லை என வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். சில எளிய படங்களை வீட்டில் வைப்பதன் மூலமே நேர்மறை ஆற்றலை ஈர்க்க முடியும்.
மகாலட்சுமியின் அருள் தரும் தாமரை
தாமரை மலர் அன்னை ஸ்ரீ மகாலட்சுமியின் அம்சமாகக் கருதப்படுகிறது. வீட்டில் தாமரை மலரின் படத்தை வைத்திருப்பது அன்னை லட்சுமியே குடியிருப்பதாக ஐதீகம். இது வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை விரட்டி அடித்து, சுபிட்சத்தை வழங்கும். இந்தப் படத்தை வீட்டின் கிழக்கு திசையில் வைப்பது சிறந்தது.
மன அமைதிக்கு புத்தர் சிலை அல்லது படம்
தியான நிலையில் அமைதியாக வீற்றிருக்கும் புத்தரின் படத்தை வீட்டில் வைத்திருப்பது மன உளைச்சலைப் போக்கும். நீங்கள் எப்போதெல்லாம் புத்தரைப் பார்க்கிறீர்களோ, அப்போதெல்லாம் உங்கள் ஆழ்மனதின் அமைதியின்மை மறைந்துவிடும். இதை வீட்டின் கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் வைக்க வேண்டும்.
பொருளாதார வளர்ச்சிக்கு நீர்வீழ்ச்சி
துள்ளிக்குதிக்கும் நீர்வீழ்ச்சியின் படம் சலனமடைந்த மனதிற்கு நிம்மதியைத் தரும். இந்த ஓவியத்தை அல்லது படத்தை வீட்டின் வடகிழக்கு மூலையில் வைப்பதன் மூலம் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் மற்றும் வீட்டில் உள்ள எதிர்மறை அதிர்வுகள் நீங்கும்.
வெற்றியை உணர்த்தும் மலைச் சிகரங்கள்
வாழ்க்கையின் உச்சியை அடைவதற்கு ஒருவர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் கடினமானது. அந்த வெற்றியை நினைவூட்டும் வகையில் மலைச் சிகரங்களின் படத்தை வீட்டில் வைக்கலாம். இது உங்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். இத்தகைய படங்களை வீட்டின் தென்மேற்கு திசையில் வைப்பது நல்ல பலனைத் தரும்.
தொழில் முன்னேற்றத்திற்கு ஓடும் குதிரைகள்
வெற்றியை நோக்கி ஓடும் குதிரைகளின் படம் உங்கள் முன்னேற்றத்திற்கு வேகம் கொடுக்கும். குறிப்பாக, தெற்கு நோக்கி ஓடுவது போன்ற குதிரைப் படங்களை வீட்டின் தெற்கு திசையில் மாட்டினால், உங்கள் தொழில் மற்றும் வாழ்க்கையில் புதிய வேகம் பிறக்கும்.
வருமானம் உயர மயில் படம்
தோகை விரித்தாடும் மயிலின் படம் அதிர்ஷ்டத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. வாஸ்து படி, மயில் படத்தை வீட்டின் தெற்கு திசையில் வைத்தால் வருமானம் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
வீட்டை இடித்து மாற்றாமல், சரியான திசையில் இதுபோன்ற படங்களை வைப்பதன் மூலம் உங்கள் இல்லத்தில் செல்வத்தையும் அமைதியையும் கொண்டு வர முடியும்.