கனடா துப்பாக்கிச் சூடு: 18 வயது திருநங்கை வெறிச்செயல் – 8 பேர் பலி

கனடா துப்பாக்கிச் சூடு: 18 வயது திருநங்கை வெறிச்செயல் – 8 பேர் பலி

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் அரங்கேறிய கோரமான துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், ஒரு ஆசிரியர் மற்றும் சிறுவர்கள் உட்பட மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் பின்னணியில் 18 வயதுடைய திருநங்கை ஒருவர் இருந்ததாக அந்நாட்டு காவல்துறை தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.

சம்பவம் நடந்த இடத்திலேயே குற்றவாளி தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். விசாரணையில், தாக்குதல் நடத்தியவர் 18 வயதுடைய ஜெஸ்ஸி வான் ரூட்செலர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து, ஆணிலிருந்து பெண்ணாக மாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

படுபயங்கர கொலைகளின் பின்னணி:

இந்த கொடூரத் தாக்குதல் அவரது வீட்டிலேயே தொடங்கியுள்ளது. முதலில் தனது தாய் மற்றும் ஒன்றுவிட்ட சகோதரனை சுட்டுக்கொன்ற ஜெஸ்ஸி, பின்னர் தான் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றுள்ளார். அங்கு எவ்வித பாகுபாடுமின்றி சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 12 முதல் 13 வயதுடைய ஐந்து மாணவர்கள் (3 சிறுமிகள், 2 சிறுவர்கள்) மற்றும் ஒரு ஆசிரியர் என 6 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தனர்.

காவல்துறை அறிக்கை:

தகவல் கிடைத்த இரண்டு நிமிடங்களிலேயே சம்பவ இடத்திற்கு விரைந்ததாகக் கூறிய காவல்துறை அதிகாரிகள், பள்ளியின் நூலகம் மற்றும் படிக்கட்டு பகுதிகளில் சடலங்கள் சிதறிக் கிடந்ததாகத் தெரிவித்தனர். குடும்பத் தகராறு மற்றும் மனநல பாதிப்பு காரணமாக இந்த அசம்பாவிதம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. “இந்தக் காட்சிகள் நெஞ்சை உலுக்குவதாக இருந்தது” என மீட்புப் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் உருக்கத்துடன் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *