வங்கதேசத் தேர்தல் வன்முறை: தேயிலைத் தோட்டத்தில் இந்து இளைஞர் சடலமாக மீட்பு

வங்கதேசப் பொதுத்தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சில்ஹெட் பகுதியில் உள்ள சம்பாரா தேயிலைத் தோட்டத்தில் சிறுபான்மையின இளைஞர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் என்ன?
கொல்லப்பட்ட இளைஞர் 28 வயதுடைய ரத்தன் சாஹுகார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சனிக்கிழமை காலை தேயிலைத் தோட்டத்திற்குள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் ரத்தனின் உடல் கிடப்பதைக் கண்டு உள்ளூர் மக்கள் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
ரத்தனின் தாத்தா லக்ஷ்மண் கூறுகையில், “நேற்றிரவு முதல் ரத்தனைக் காணவில்லை. குடும்பத்தினர் இரவு முழுவதும் தேடி வந்த நிலையில், இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்” என வேதனையுடன் தெரிவித்தார். உடலிலுள்ள காயங்களைப் பார்க்கும்போது, அவர் வேறு எங்கோ கொலை செய்யப்பட்டு, பின்னர் உடலைத் தோட்டத்தில் வீசிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தேர்தல் வன்முறையா?
தேர்தல் நடக்கும் அதே நாளில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதால், இது திட்டமிட்ட தேர்தல் வன்முறை என உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இருப்பினும், கமல்ஹஞ்ச் காவல்துறையினர் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
சிறுபான்மையினர் அச்சம்
வங்கதேசத்தில் கடந்த சில மாதங்களாகவே இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சமீபத்தில் மைமன்சிங்கில் 62 வயது இந்து தொழிலதிபர் ஒருவரும் இதேபோல் படுகொலை செய்யப்பட்டார்.
யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு இது குறித்து மௌனம் காத்து வரும் நிலையில், தேர்தல் நாளன்று நிகழ்ந்துள்ள இந்தத் துயரச் சம்பவம் அந்நாட்டிலுள்ள சிறுபான்மையினரிடையே தங்களின் பாதுகாப்பு குறித்த ஆழ்ந்த கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.