லம்போர்கினி விபத்து: 4 நாட்களுக்குப் பின் சிக்கும் புகையிலை அதிபரின் மகன் – சிறையில் தள்ள போலீஸ் அதிரடி!

லம்போர்கினி விபத்து: 4 நாட்களுக்குப் பின் சிக்கும் புகையிலை அதிபரின் மகன் – சிறையில் தள்ள போலீஸ் அதிரடி!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் அதிவேகமாக லம்போர்கினி காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பிரபல புகையிலை தொழிலதிபர் கே.கே.மிஸ்ராவின் மகன் சிவம் மிஸ்ராவை நான்கு நாட்களுக்குப் பிறகு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் கைதான சிவம் மிஸ்ராவிற்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக கான்பூர் போலீஸ் கமிஷனர் ரகுவீர் லால் உறுதிப்படுத்தியுள்ளார்.

சம்பவம் என்ன?

கடந்த ஞாயிற்றுக்கிழமை விஐபி சாலையில் அதிவேகமாக வந்த சொகுசு லம்போர்கினி கார், அங்கிருந்த ஒரு ஆட்டோ மற்றும் பைக் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தௌபீக் அகமது உள்ளிட்ட ஆறு பேர் படுகாயமடைந்தனர். விபத்தின் போது சிவம் மிஸ்ராவின் கார் பைக்கை பல மீட்டர் தூரம் இழுத்துச் சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. விபத்து நடந்தவுடன், சிவத்தை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றவும், காரின் நம்பர் பிளேட்டை மறைக்கவும் அவரது மெய்க்காவலர்கள் (Bouncers) முயன்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாடகம் அம்பலம்

இந்த வழக்கில் போலீசாரை திசைதிருப்ப பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மோகன் லால் என்ற டிரைவர் நீதிமன்றத்தில் சரணடைந்து, விபத்தின் போது சிவத்திற்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் தான் காரை ஓட்டியதாகக் கூறினார். இருப்பினும், சிசிடிவி காட்சிகள் மற்றும் நேரில் பார்த்த சாட்சிகளின் வாக்குமூலங்கள் அடிப்படையில் இந்த வாதத்தை காவல்துறையினர் நிராகரித்துள்ளனர். விபத்தின் போது ஸ்டீயரிங் சிவம் மிஸ்ராவின் கையில் தான் இருந்தது என்பது உறுதியாகியுள்ளது.

தற்போது அனைத்து ஆதாரங்களையும் திரட்டியுள்ள காவல்துறையினர், இந்த உயர்தர வழக்கில் (High-profile Case) பாரபட்சமின்றி கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *