இந்தியாவிடம் சரணடைந்த பாகிஸ்தான்: உலகமே உங்களைப் பார்த்து சிரிக்கிறது.. கனீரியா விளாசல்!

இந்தியாவிடம் சரணடைந்த பாகிஸ்தான்: உலகமே உங்களைப் பார்த்து சிரிக்கிறது.. கனீரியா விளாசல்!

இஸ்லாமாபாத்: 2026 டி20 உலகக்கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான நீண்ட கால மோதல் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) அந்தர் பல்டி நடவடிக்கைகளை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனீரியா கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாகிஸ்தான் வாரியத்தின் நாடகம்

பிப்ரவரி 15-ம் தேதி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுவது உறுதியாகியுள்ளது. முன்னதாக, இந்தியாவுடன் விளையாட மாட்டோம் என்றும், போட்டியை புறக்கணிப்போம் என்றும் பாகிஸ்தான் அரசு மற்றும் பிசிபி பிடிவாதம் காட்டி வந்தன. பல வார கால இழுபறிக்குப் பிறகு, இப்போது இந்தியாவுடன் விளையாடத் தயார் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

இந்த திடீர் மனமாற்றம் குறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசிய டேனிஷ் கனீரியா, “எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த நாடகம் இத்துடன் முடிந்துவிடப் போவதில்லை. அவர்கள் நிச்சயம் முடிவை மாற்றுவார்கள் என்று எனக்கு முன்பே தெரியும். ஏனெனில், சாக்குப்போக்கு சொல்வதில் அவர்கள் கைதேர்ந்தவர்கள். ஒரு நிமிடம் ஒரு பேச்சும், அடுத்த நிமிடம் அதற்கு நேர்மாறான பேச்சும் பேசுபவர்களை நான் பார்த்ததே இல்லை. பாகிஸ்தானின் இந்தச் செயலால் உலகமே சிரித்துக் கொண்டிருக்கிறது,” எனச் சாடினார்.

ஐசிசியின் அதிரடி நெருக்கடி

இந்தியாவுடன் விளையாட மறுத்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) எச்சரித்ததே பாகிஸ்தானின் இந்த பணிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ஐசிசி உடனான கூட்டத்தின் போது, இந்தியாவுடன் இருதரப்பு தொடர் நடத்த பாகிஸ்தான் கோரிக்கை வைத்தது.

ஆனால், பிடிவாதம் பிடித்தால் பாகிஸ்தான் அணிக்குத் தடை விதிக்கப்படும் என்றும், பெரும் நிதி இழப்பைச் சந்திக்க நேரிடும் என்றும் ஐசிசி எச்சரித்தது. மேலும், பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதற்கான அனுமதியில் சிக்கல் ஏற்படும் என்றும் கூறப்பட்டது. நிலைமை விபரீதமாவதை உணர்ந்த பிசிபி, வேறு வழியின்றி பின்வாங்கியுள்ளது.

வார்த்தையில் உறுதி வேண்டும்

தொடர்ந்து பேசிய கனீரியா, “போட்டியை புறக்கணிக்கிறோம் என்று திடீரென அறிவிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒருமுறை முடிவு எடுத்துவிட்டால், அதில் உறுதியாக நிற்க வேண்டும். ஊடக வெளிச்சத்திற்காக எதையாவது அறிவித்துவிட்டு, பின்னர் பின்வாங்குவது நிலைமையை மேலும் மோசமாக்கும். வெறும் 24 மணிநேரம் செய்திகளில் இடம்பெறுவதற்காக இது போன்ற செயல்களில் ஈடுபடுவது தேவையற்றது. எதிர்காலத்தில் இது உங்களுக்குப் பெரும் தலைவலியாக மாறும்,” என எச்சரித்தார்.

எதிர்பார்ப்பில் இந்தியா – பாகிஸ்தான் மோதல்

ஐசிசி தொடர்களிலேயே அதிக வருமானம் ஈட்டித் தரும் போட்டியாக இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம் உள்ளது. கடைசியாக விளையாடிய 5 போட்டிகளிலும் பாகிஸ்தான் இந்தியாவிடம் தோல்வியடைந்துள்ளது. தற்போதைய தொடரில் இரண்டு வெற்றிகளுடன் நல்ல ஃபார்மில் இருக்கும் பாகிஸ்தான், பிப்ரவரி 15 அன்று கொழும்பில் நடைபெறவுள்ள போட்டியில் இந்தியாவின் ஆதிக்கத்தை முறியடிக்கக் காத்திருக்கிறது. ரசிகர்களிடையே இப்போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *