ரூ.14 லட்சம் கார் லோன் மோசடி: அதிமுக பிரமுகர் அதிரடி கைது!

ரூ.14 லட்சம் கார் லோன் மோசடி: அதிமுக பிரமுகர் அதிரடி கைது!

சென்னை மேற்கு தாம்பரம், திருநீர்மலை சாலையைச் சேர்ந்தவர் லோகேஷ் என்ற கிஷோர் (34). அதிமுக பிரமுகரான இவர், தனது மனைவி திவ்யா (32) உடன் இணைந்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு பிரபல தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.14 லட்சம் கடன் பெற்று சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

ஆரம்பத்தில் ஐந்து மாதங்கள் மட்டும் முறையாகத் தவணை (EMI) செலுத்திய கிஷோர், அதன் பிறகு பணத்தைச் செலுத்தவில்லை. மாறாக, அந்த நிதி நிறுவனத்தில் பணிபுரியும் குரோம்பேட்டை விக்னேஷ் மற்றும் திரிசூலம் விக்னேஷ் ஆகியோரின் உதவியுடன் ஒரு பெரும் மோசடித் திட்டத்தைத் தீட்டியுள்ளார்.

அதிதிர்ச்சியூட்டும் போலி NOC மோசடி

பொதுவாக ஒரு கார் கடனில் இருக்கும்போது, அதன் ஆர்.சி புத்தகத்தில் (RC Book) நிதி நிறுவனத்தின் பெயர் ‘ஹைப்போதெிகேஷன்’ (Hypothecation) பிரிவில் இடம் பெற்றிருக்கும். கடனை முழுமையாக அடைத்த பிறகு மட்டுமே நிதி நிறுவனம் வழங்கும் தடையில்லாச் சான்றிதழை (NOC) வைத்து அந்தப் பெயரை நீக்க முடியும்.

ஆனால் கிஷோர், வங்கி அதிகாரிகளின் கையெழுத்து மற்றும் முத்திரையைத் தவறாகப் பயன்படுத்தி, கடனை முழுமையாகச் செலுத்திவிட்டதாகக் கூறி போலி NOC ஆவணங்களைத் தயாரித்துள்ளார். இந்த போலி ஆவணங்களைத் தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் (RTO) சமர்ப்பித்து, தனது காரின் ஆர்.சி புத்தகத்தில் இருந்த நிதி நிறுவனத்தின் பெயரை நீக்கியுள்ளார். இதன் மூலம் அந்த கார் எவ்வித கடனும் இல்லாத ‘கிளீன்’ வாகனமாக மாற்றப்பட்டது.

இரண்டாவது முறையாகக் கடன் வாங்கி ஏமாற்று வேலை

கடனே இல்லாதது போன்ற புதிய ஆர்.சி புத்தகத்தைக் காட்டி, மற்றொரு தனியார் நிதி நிறுவனத்தை அணுகிய கிஷோர், “அவசர பணத்தேவை” எனக் கூறி அதே காரை அடமானம் வைத்து மீண்டும் ரூ.14 லட்சம் கடன் பெற்றுள்ளார்.

நிதி நிறுவனத்தின் மேலாளர் ரவி (32) அளித்த புகாரின் பேரில், தாம்பரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து அதிமுக பிரமுகர் கிஷோரைக் கைது செய்தனர். மேலும், இந்த மோசடியில் தொடர்புடைய அவரது மனைவி திவ்யா மற்றும் அவர்களுக்கு உதவிய நிதி நிறுவன ஊழியர்கள் இருவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒரு காரை வைத்து இரண்டு முறை கடன் பெற்று, வங்கி மென்பொருள் மற்றும் அரசு ஆவணங்களையே ஏமாற்றிய இந்தச் சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *