இரட்டை சூப்பர் ஓவர் அதிரடி! போராடி தோற்ற ஆப்கானிஸ்தான்: வீணானதா குர்பாஸின் அதிரடி வேட்டை?

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் வெற்றியை இருமுறை கையில் வைத்தும், ஆப்கானிஸ்தான் அணி அதை நழுவவிட்டுள்ளது. ரசிகர்களின் இதயத்துடிப்பை எகிற வைத்த இந்த ஆட்டத்தில், கடைசி நேரத்தில் எடுத்த தவறான முடிவுகளால் ஆப்கானிஸ்தான் தோல்வியைத் தழுவியது.
முன்னாள் கேகேஆர் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் 42 பந்துகளில் 84 ரன்கள் குவித்து அதிரடியான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார். 187 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ஆப்கானிஸ்தான் ஆட்டத்தை ‘டை’ செய்தது. இதனால் போட்டி சூப்பர் ஓவருக்குச் சென்றது.
முதல் சூப்பர் ஓவர் சமனில் முடிய, இரண்டாவது சூப்பர் ஓவரில் 24 ரன்கள் என்ற இமாலய இலக்கை ஆப்கானிஸ்தான் துரத்தியது. குர்பாஸ் தொடர்ந்து மூன்று சிக்ஸர்களை விளாசி நம்பிக்கையூட்டினாலும், இறுதியில் அந்த அணியால் வெற்றியை எட்ட முடியவில்லை. ரஷீத் கான் போன்ற உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளருக்கு சூப்பர் ஓவரில் வாய்ப்பு வழங்காதது மற்றும் பேட்டிங் வரிசையில் ஏற்பட்ட குளறுபடிகள் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. வெற்றிக்கோட்டை நெருங்கியும் கோட்டை விட்டதால் உலகக்கோப்பை கனவில் ஆப்கானிஸ்தான் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.