நிர்மலா சீதாராமன் ஒரு ‘ரிவர்ஸ் ராபின்ஹூட்’: பட்ஜெட் விவாதத்தில் அபிஷேக் பானர்ஜி கடும் தாக்கு!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை ‘ரிவர்ஸ் ராபின்ஹூட்’ என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பட்ஜெட் விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், ஏழைகளிடமிருந்து பறித்து பணக்காரர்களுக்கு சாதகமாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
மக்களவையில் சுமார் 34 நிமிடங்கள் ஆவேசமாக உரையாற்றிய அபிஷேக் பானர்ஜி, மேற்கு வங்கத்திற்கு எதிரான மத்திய அரசின் பாரபட்சத்தை பட்டியலிட்டார். மாநிலத்திலிருந்து சுமார் 6.5 லட்சம் கோடி ரூபாய் வரியாகப் பெற்றுச் செல்லும் மத்திய அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் மற்றும் வீட்டு வசதித் திட்டங்களுக்கான 1.96 லட்சம் கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
பாஜகவை நேரடியாக சவால் செய்த அபிஷேக், “மேற்கு வங்கத்தில் 2016, 2021 மற்றும் 2024 தேர்தல்களில் பாஜக ஹாட்ரிக் தோல்வியைச் சந்தித்துள்ளது. வரும் 2026 தேர்தலிலும் நான்காவது முறையாகத் தோல்வியைத் தழுவும். எவ்வளவு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், வங்காளம் ஒருபோதும் தலைவணங்காது,” என்று முழங்கினார்.
மேலும், இந்திய குடிமக்களை ‘ஊடுருவல்காரர்கள்’ என்று முத்திரை குத்துவதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த அவர், இது ஒரு ‘ஜும்லா’ (பொய் வாக்குறுதி) அரசு என்றும், சாமானிய மக்களுக்கு வரிப் பொறியை ஏற்படுத்தியுள்ளதாகவும் விமர்சித்தார். அபிஷேக் பானர்ஜியின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, தனது பதில் உரையில் இதற்கு விளக்கமளிப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்த விவாதத்தில் காங்கிரஸ் எம்பி சசி தரூர் மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரும் பங்கேற்று பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்தனர். இது தீர்வுகளை வழங்காத, வெறும் கோஷங்களை மட்டுமே கொண்ட அரசு என்று அவர்கள் சாடினர்.