சிறையில் இம்ரான் கான் எப்படி இருக்கிறார்? 3 மாதங்களுக்குப் பிறகு சந்திக்க உச்சநீதிமன்றம் அனுமதி!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்ய அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களாக அதியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரானை எவரும் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என்ற புகாருக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை, தலைமை நீதிபதி யாஹ்யா அப்ரிதி தலைமையிலான அமர்வு, பிடிஐ (PTI) கட்சியின் வழக்கறிஞர் சல்மான் சஃப்தாரை ‘நீதிமன்ற உதவியாளராக’ நியமித்து, உடனடியாக சிறைக்குச் சென்று ஆய்வு செய்ய உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவின்படி, சல்மான் சஃப்தார் சிறையில் இம்ரான் கானை நேரடியாகச் சந்தித்து அவரது உடல்நிலை குறித்த அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார். முன்னதாக, வாரத்திற்கு இரண்டு நாட்கள் குடும்ப உறுப்பினர்கள் சந்திக்க இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தும், சிறை நிர்வாகம் அதனை மதிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. 2023 ஆகஸ்ட் முதல் சிறையிலுள்ள இம்ரானின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் குறித்து கவலையில் இருந்த அவரது ஆதரவாளர்களுக்கு நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.