அமெரிக்காவில் திகில்: சாலையில் விழுந்த விமானம் – தப்பிய உயிர்கள்!

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் திங்கள்கிழமை அன்று பெரும் விபத்து ஒன்று தவிர்க்கப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சிறிய ரக விமானம் ஒன்று பரபரப்பான சாலையில் அவசர அவசரமாகத் தரை இறங்கியது.
நடந்தது என்ன?
கெய்ன்ஸ்வில்லில் உள்ள ‘லீ கில்மர் மெமோரியல்’ விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம், கேண்டனில் உள்ள செரோக்கி கவுண்டி விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தது. நடுவானில் இன்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டதை உணர்ந்த விமானி, மீண்டும் விமான நிலையத்திற்கே திரும்ப முயன்றார். ஆனால், போதிய வேகம் இல்லாததால் வேறு வழியின்றி ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களுக்கு இடையே சாலையிலேயே தரையிறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
SUV காரில் மோதிய எரிபொருள் டேங்க்
தரையிறங்கும் போது விமானத்தின் வலது இறக்கை ஒரு வாகனத்தின் மீது மோதியது. இதில் விமானத்தின் எரிபொருள் டேங்க் பெயர்ந்து, அங்கிருந்த ஒரு SUV காரின் பின்புறத்திற்குள் புகுந்தது. இதனால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது.
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
இந்தக் கோரமான விபத்தில் எவருக்கும் பெரிய அளவில் காயங்கள் ஏற்படவில்லை என்பது பெரும் நிம்மதியை அளித்துள்ளது. விபத்தைத் தொடர்ந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு, ஃபெடரல் ஏஜென்சிகள் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.