ராணுவ தளபதியின் ரகசிய புத்தகம் ‘லீக்’: உங்கள் அந்தரங்கம் பாதுகாப்பானதா?

புது தில்லி: நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ரகசிய ஆவணங்கள் முதல் சாமானியர்களின் தனிப்பட்ட தகவல்கள் வரை அனைத்தும் இன்று இணையத்தில் எளிதாகக் கிடைக்கிறதா? முன்னாள் ராணுவ தளபதி மனோஜ் நாரவனே எழுதிய ‘ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி’ (Four Stars of Destiny) என்ற இன்னும் வெளியாகாத புத்தகம், அனுமதியின்றி இணையத்தில் கசிந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சகத்தின் முறையான அனுமதி பெறுவதற்கு முன்பே, இந்த முக்கியத்துவம் வாய்ந்த கையெழுத்துப் பிரதி பொதுவெளியில் வெளியானதால் இது தொடர்பாக தற்போது எஃப்ஐஆர் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தின் பிடிஎஃப் (PDF) வடிவம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, டெல்லி போலீஸின் சிறப்புப் பிரிவு தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது.
நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி இந்தப் புத்தகத்தின் சில பகுதிகளைக் குறிப்பிட்டது சர்ச்சையை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. ஒரு நாட்டின் முக்கிய அதிகாரியின் புத்தகமே முறையான பாதுகாப்பு இன்றி கசியும் போது, சாதாரண மக்களின் டிஜிட்டல் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இது பதிப்பகத்தின் அலட்சியமா அல்லது திட்டமிடப்பட்ட சைபர் குற்றமா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.