தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 200 மடங்கு அதிக கட்டணம், ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவு நிறைவேறுமா?

செய்தி பிரிவு: அரசு கல்லூரிகளுடன் ஒப்பிடுகையில் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கல்விக்கட்டணம் 200 மடங்கு அதிகரித்துள்ளது சாதாரண நடுத்தர குடும்பங்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது. அரசு கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டு படிப்பிற்கு வெறும் 55 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவாகும் நிலையில், தனியார் கல்லூரிகளில் கோடிக்கணக்கில் பணம் கேட்கப்படுகிறது. இந்த கல்விச் செலவு உயர்வு, எதிர்காலத்தில் பொதுமக்களுக்கான மருத்துவச் சிகிச்சையின் விலையையும் உயர்த்தும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிக பணம் செலவழித்து படிக்கும் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் தகுந்த வேலைவாய்ப்பு கிடைக்குமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் முறையான ஊதியம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, லாப நோக்கில் செயல்படும் தனியார் மருத்துவக் கல்லூரிகளை முறைப்படுத்துவது குறித்து அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.