சர்பராஸ் கானின் சரவெடி ஆட்டம் அர்ஜுன் டெண்டுல்கரின் பந்துவீச்சை துவம்சம் செய்து மும்பை இமாலய இலக்கு

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் கோவா அணிக்கு எதிராக மும்பை வீரர் சர்பராஸ் கான் ருத்ரதாண்டவம் ஆடினார். வெறும் 75 பந்துகளில் 14 சிக்ஸர்கள் மற்றும் 9 பவுண்டரிகளுடன் 157 ரன்கள் குவித்து தேர்வுக் குழுவினருக்கு வலுவான செய்தியை அனுப்பியுள்ளார். அவருக்கு துணையாக தம்பி முஷீர் கான் 66 ரன்கள் எடுக்க, மற்ற வீரர்களின் அதிரடியால் மும்பை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 444 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது.
மும்பை வீரர்களின் அதிரடியை கட்டுப்படுத்த முடியாமல் கோவா அணியின் நட்சத்திர வீரர் அர்ஜுன் டெண்டுல்கர் திணறினார். 8 ஓவர்களில் 78 ரன்களை வாரி வழங்கிய அவருக்கு ஒரு விக்கெட் கூட கிடைக்கவில்லை. கடின இலக்கை நோக்கி களமிறங்கிய கோவா அணியில் அர்ஜுன் டெண்டுல்கர் தொடக்க வீரராக நிதானமாக ஆடி வருகிறார். சர்பராஸ் கானின் இந்த அதிரடி ஆட்டம் தற்பொழுது கிரிக்கெட் உலகில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.