வெறிநாய்க் கடித்த ஆட்டின் இறைச்சியைச் சாப்பிட்ட 400 பேர் சத்தீஸ்கரில் பெரும் பரபரப்பு

சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூர் மாவட்டத்தில் உள்ள சர்காவா கிராமத்தில் காளி பூஜையின் போது பலியிடப்பட்ட ஆட்டின் இறைச்சியை உண்ட 400 கிராம மக்கள் தற்போது கடும் அச்சத்தில் உள்ளனர். அந்த ஆட்டை ஏற்கனவே வெறிநாய் கடித்திருந்த விஷயம் தெரிந்தும், கிராமத் தலைவர்கள் அதை மறைத்து பலியிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் வெளியானதும், உயிருக்கு ஆபத்தான ரேபிஸ் நோய் பரவுமோ என்ற அச்சத்தில் கிராம மக்கள் மருத்துவப் பரிசோதனை கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து கால்நடை மருத்துவர் சி.கே. மிஸ்ரா கூறுகையில், இறைச்சி நன்றாக சமைக்கப்பட்டால் வைரஸ் உயிர்வாழ வாய்ப்பில்லை என்றாலும், முன்னெச்சரிக்கையாகப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம் என்றார். இருப்பினும், பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு உடனடியாக மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றமும் ஆக்ரோஷமான சூழலும் நிலவி வருகிறது.