சிரியா கரன்சியில் அதிரடி மாற்றம் அசாத் படம் நீக்கப்பட்டு பூக்கள் மற்றும் பழங்கள் இடம் பெற்றன

சிரியாவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக புதிய ஆண்டில் புதிய ரூபாய் நோட்டுகளை அந்நாட்டு அதிபர் அகமது அல்-ஷாரா அறிமுகப்படுத்தியுள்ளார். நீண்ட கால உள்நாட்டுப் போர் மற்றும் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரியாவில், முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாத் மற்றும் அவரது குடும்பத்தினரின் படங்கள் நோட்டுகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதற்குப் பதிலாக சிரியாவின் அடையாளமான ரோஜா, ஆரஞ்சு, பருத்தி மற்றும் கோதுமை போன்ற விவசாய விளைபொருட்களின் படங்கள் 10 முதல் 500 பவுண்டு மதிப்பிலான புதிய நோட்டுகளில் அச்சிடப்பட்டுள்ளன. இது தனிநபர் வழிபாட்டை முடிவுக்குக் கொண்டுவரும் புதிய தொடக்கம் என அரசு அறிவித்துள்ளது.
நாட்டின் பணமதிப்பு வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த ரூபாய் நோட்டுகளில் இருந்து இரண்டு பூஜ்ஜியங்கள் நீக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கணக்கு வழக்குகளை எளிதாக்கவும், மக்கள் அதிக அளவிலான நோட்டுகளை சுமந்து செல்வதைத் தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2011 முதல் சிரியா பவுண்டின் மதிப்பு டாலருக்கு நிகராகக் கடுமையாக சரிந்ததால் இந்த ரீடினோமினேஷன் முறை அவசியமானது. ரஷ்யாவிற்குப் பதிலாக வேறு இடத்தில் அச்சிடப்பட்டுள்ள இந்தப் புதிய நோட்டுகள் ஜனவரி 1 முதல் புழக்கத்திற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.