வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் இடையே நெருக்கம் அதிகரிப்பு? முகமது யூனுஸின் முக்கிய சந்திப்பு

வங்கதேச இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் மற்றும் பாகிஸ்தான் தூதர் இம்ரான் ஹைதர் இடையிலான சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் உறவை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பில் வர்த்தகம், முதலீடு மற்றும் விமானப் போக்குவரத்து துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக கல்வி, கலாச்சாரம் மற்றும் மருத்துவத் துறைகளில் பரிமாற்றங்களை அதிகரிப்பதன் மூலம் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இரு தரப்பும் விருப்பம் தெரிவித்தன.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் கடந்த ஆண்டை விட 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக தூதர் தெரிவித்தார். வங்கதேச மாணவர்கள் பாகிஸ்தானில் உயர்கல்வி பயில ஆர்வம் காட்டி வரும் நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக பாகிஸ்தான் செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஜனவரி மாதம் முதல் டாக்கா மற்றும் கராச்சி இடையே நேரடி விமானச் சேவைகள் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது, இது தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான உறவில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்.