நேபாளத் தேர்தலில் திடீர் திருப்பம் ஜேஎஸ்பி மற்றும் எல்எஸ்பி கட்சிகள் இணைப்புடன் பாலேந்திர ஷா பிரதமர் வேட்பாளராக அறிவிப்பு

நேபாளத்தில் மார்ச் 5ஆம் தேதி நடைபெற உள்ள பொதுத்தேர்தலுக்கு முன்னதாக மதேசி அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. மஹந்த் தாக்கூர் தலைமையிலான ஜனதா சமாஜ்வாதி கட்சி (ஜேஎஸ்பி) மற்றும் உபேந்திர யாதவ் தலைமையிலான லோக்தாந்திரிக் சமாஜ்வாதி கட்சி (எல்எஸ்பி) ஆகியவை தங்களை இணைத்துக் கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. கூட்டாட்சி முறை, சமூக நீதி மற்றும் ஜனநாயகக் குடியரசை வலுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இரு கட்சித் தலைவர்களும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர். இந்த இணைப்பு நேபாளத்தின் தெற்குப் பகுதியில் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம் காத்மாண்டு மேயர் பாலேந்திர ஷா பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தலில் புதிய அலை ஒன்றை உருவாக்கியுள்ளார். பாலேந்திர ஷா மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வதந்திர கட்சி (ஆர்எஸ்பி) இணைந்து மார்ச் 5 தேர்தலைச் சந்திக்க ஒப்பந்தம் செய்துள்ளன. இதன்படி பாலேந்திர ஷா குழுவினர் ஆர்எஸ்பி கட்சியின் ‘மணி’ சின்னத்தில் போட்டியிடுவார்கள். கட்சியின் பெயர் மற்றும் சின்னம் மாறாமல் இருக்கும் நிலையில், பாலேந்திர ஷாவின் வருகை தேர்தல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.