விளையாட்டாக சுடப்பட்ட துப்பாக்கி 8 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழப்பு

மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனாவில் உள்ள போர்சா பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் 8 வயது சிறுவன் ரிஷப் தோமர் பரிதாபமாக உயிரிழந்தான். சனிக்கிழமை இரவு வீட்டின் உரிமையாளரின் 315 போர் உரிமம் பெற்ற துப்பாக்கியுடன் மூன்று சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது 14 வயது சிறுவன் ஒருவன் விளையாட்டாக துப்பாக்கியை இயக்கியதில் குண்டு நேராக ரிஷப்பின் தலையில் பாய்ந்து அவன் சம்பவ இடத்திலேயே பலியானான்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சிறுவனின் பெற்றோர் இது கொலை எனப் புகார் அளித்துள்ளனர். சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மாற்றப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறை உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது. விளையாடும்போது நடந்த விபத்தா அல்லது திட்டமிட்ட கொலையா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.